இலவம் பஞ்சை அரசு கொள்முதல் செய்யக்கோரிகலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இலவம் பஞ்சை அரசு கொள்முதல் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இலவம் பஞ்சு விலை வீழ்ச்சி
ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இலவம் பஞ்சு மற்றும் கொட்டை முந்திரி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒரு கிலோ இலவம் பஞ்சை ரூ.90 முதல் ரூ.130 வரை விற்பனை செய்து வந்தனர். இந்த ஆண்டு விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது 1 கிலோ இலவம் பஞ்சை ரூ.53-க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இலவம் பஞ்சை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.
அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இலவம் பஞ்சு, கொட்டை முந்திரி விவசாயிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வனராஜன், முருகன், மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
அரசு கொள்முதல்
மாவட்ட செயலாளர் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, 1 கிலோ இலவம் பஞ்சுக்கு ரூ.120 விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கொட்டை முந்திரி 1 கிலோவுக்கு ரூ.100 விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். இலவம் பஞ்சு வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் வருவாய்த்துறை-தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் வகையில் முத்தரப்பு கூட்டம் நடத்தி விலையை தீர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.