கலப்படத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி
உணவு, மருந்துகளில் உள்ள கலப்படத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி
கரூரில் நேற்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கீழ்பவானி பாசனத்திட்டம் ஒரு மழைநீர் அறுவடை திட்டம். இது நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமும் ஆகும். கட்டப்பட்ட அணையும் வெட்டப்பட்ட கால்வாய்களும் மண்ணால் ஆனவை. இப்பாசனத்திற்கு விடப்படும் நீர், கடலில் வீணாக எங்கும் கலப்பதில்லை. காவிரி தீர்ப்பின்படி பழைய பவானியில் இருந்து பாசனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நீர் அளவு 8.13 டி.எம்.சி. ஆனால் தொடர்ந்து 24 முதல் 30 டி.எம்.சி. வரை முறைகேடாக விடப்படுகிறது. இந்த தவறு 65 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
இவ்வாறான ஒழுங்கீனங்களை களையவும், கான்கிரீட் கால்வாயாக மாற்றும் முயற்சியை அரசு கைவிடவும் தவறினால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் தொகுதி பாசன பயனாளிகள் தி.மு.க. அணி வேட்பாளர்களை தோற்கடிப்பார்கள்.
மேலும் நாட்டில் உணவு முதல் உயிர் காக்கும் மருந்து வரை கலப்படம் இல்லாத இடங்களே இல்லை. அரசு இரும்புக்கரம் கொண்டு கலப்படத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தினால் மட்டுமே நோய் வெகுவாக குறையும்.
மருத்துவமனைகள், மருந்து கடைகள் எண்ணிக்கை நான்கில் ஒன்றாக குறையும். அப்போது மருத்துவ படிப்பிற்கு மவுசு இல்லாமல் போகும். மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கல்லூரி காற்று வாங்கும். அப்போது நீட் தேர்வு தானாக காணாமல் போகும். கலப்படத்தை ஒழிப்பது மட்டுமே நீட்டை ஒழிக்கும் வழி.
இவ்வாறு அவர் கூறினார்.