டெட்ரா பேக் அறிமுகம் செய்வதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்


டெட்ரா பேக் அறிமுகம் செய்வதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்
x

டெட்ரா பேக் அறிமுகம் செய்வதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

திருவாரூர்

தமிழகத்தில் டெட்ரா பேக் அறிமுகம் செய்வதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதுபாட்டில் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்ணாடி பாட்டில்கள்

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனேயே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக மஞ்சள் பைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதனை செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில் மண்ணின் இயற்கை தன்மையை கெடுக்காததும், இறுதியில் மறுசுழற்சிக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதுமான கண்ணாடி பாட்டில்களை தவிர்த்து விட்டு மக்காத தன்மை கொண்ட டெட்ரோ பேக் எனப்படும் பிளாஸ்டிக் டப்பாக்களை டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்த முடிவு செய்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழைய பாட்டில்கள் கொள்முதல் தடை

மது உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், தங்களுடைய தனித்துவத்தை காட்டுவதற்காக பாட்டிலில் தங்களின் நிறுவனத்தின் பெயரை பதித்து பாட்டில்களை அச்சடித்து உற்பத்தி செய்தனர். இதனால் எந்த நிறுவனத்துக்கு வேண்டுமானாலும் காலி மது பாட்டில்களை கழுவி சுத்தம் செய்து அனுப்பலாம் என்ற நிலை மாறி, பாட்டிலில் அச்சடிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பழைய பாட்டில்களை அனுப்ப முடியும் என்ற நிலை உருவானது.

தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு வடிவங்களில் பாட்டில்களை வடிவமைக்க தொடங்கியபோது, போட்டியின் காரணமாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வடிவங்களை அடிக்கடி மாற்றி விடுவதாலும், பழைய பாட்டில்கள் கொள்முதல் தடைபட்டது.

5 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும்

கண்ணாடி பாட்டில்களை பொறுத்தவரை சிலிகான் கலந்து செய்யப்படுவதாகும். பிளாஸ்டிக் பாட்டில்களோடு ஒப்பிடும்போது, பிளாஸ்டிக் பாட்டில்கள் அதே அளவில் மக்கும் தன்மை உடையதல்ல. ஆனால் கண்ணாடி பாட்டில்கள் 25 ஆண்டுகளிலேயே மக்கிவிடும் தன்மை கொண்டது. மக்குவதற்கு 25 ஆண்டு காலம் ஆனாலும் மண்வளத்தை பாதிக்காது.

கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சிக்கு கொண்டு வரும் காரணிகளை ஆராயாமல், கண்ணாடி பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கு கேடுகளை விளைவிப்பதாக கூறி ஒட்டுமொத்தமாக கண்ணாடி பாட்டில்களை புறக்கணிக்கலாமா?

தமிழக அரசு டெட்ரோ பேக் மூலம் மது விற்பனை செய்தால், தமிழகம் முழுவதும் கண்ணாடி பாட்டில்களை கழுவும் தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும்.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி உள்ளனர். எனவே மதுபாட்டில் தொழிலாளர்களின் நலன்கருதி தமிழகத்தில் டெட்ரா பேக் அறிமுகம் செய்வதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாறாக மது உற்பத்தி ஆலைகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாட்டில்களை பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். பாட்டில்களில் தங்களுடைய நிறுவனங்களின் பெயரை அச்சிடுவதை தடை செய்ய வேண்டும். புதிய பாட்டில்கள் பயன்படுத்தும் சதவீதத்தை குறைத்து பழைய பாட்டில்களை பயன்படுத்துவதை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.

கொள்முதல் விலை அதிகரிக்கும்

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பழைய பாட்டில்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கும். இதன் மூலம், வயல்வெளிகளிலும் நீர் நிலைகளிலும் தேங்கி கிடக்கின்ற காலி மது பாட்டில்களின் விலை, இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு என கருதப்படும் காலி மது பாட்டில்கள் அனைத்தும் மது ஆலைகளின் மூலமாகவே கொள்முதல் செய்யப்பட்டு மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் என மதுபாட்டில் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story