அரசு கேபிள் டி.வி.யில் சீரான முறையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்
அரசு கேபிள் டி.வி.யில் சீரான முறையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று ஆபரேட்டர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பத்தூர் தாலுகாவை சேர்ந்த சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் ஒருங்கிணைப்பாளர் ஜோதீஸ்வரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். இங்கு அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் 350 ஆப்ரேட்டர்கள் உள்ளனர். திருப்பத்தூர் வட்டத்தில் மட்டும் 170 ஆப்ரேட்டர்கள் உள்ளனர். தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனத்தில் 300 பேர் பதிவு செய்து சிக்னல் பெற்றுள்ளோம். திருப்பத்தூர் வட்டத்தில் சுமார் 25 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. கடந்த 19-ம் தேதி முதல் அரசு கேபிள் டி.வி. நிர்வாகத்தில் இருந்து முறையான ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதனால் கேபிள் டிவி சந்தாரர்களுக்கு எங்களால் பதில் அளிக்க முடியவில்லை.
அவர்களிடம் அடுத்த மாதம் சந்தா பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திடம் புகார் அளித்தால், சேவை மென்பொருள் தனியார் நிறுவனத்தால் சட்ட விரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதாகவும், அதனால், கேபிள் ஒளிபரப்பில் பாதிப்பு ஏற்பட்டதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 4 நாட்களாக கேபிள் டிவி ஒளிப்பரப்பு செய்ய முடியாததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். எனவே, இதை சரி செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.