கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் -சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கலவரத்தின் போது சிதைந்து போன பள்ளியை சீரமைப்பது தொடர்பான அனுமதியை வழங்கி மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் உத்தரவிட்டார்.
சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி போலீஸ் பாதுகாப்புடன் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிறப்பு அதிகாரியை நியமித்து பள்ளியை அரசு தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.