நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் வாலிபர் பலியான சம்பவத்தில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கடலூர்

கடலூர் அருகே உள்ள குமளங்குளத்தை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் சிவக்குமார் (வயது 33). இவர் ஜவுளிக்கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 8.12.2018 அன்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு விரைவு பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்தியா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 16.9.2020 அன்று சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.21 லட்சத்து 21 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால் இதுவரை நஷ்டஈடு தொகை வழங்காததால் கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி சுபாஅன்புமணி, விபத்தில் இறந்த சிவக்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.27 லட்சத்து 88 ஆயிரத்து 706 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு தொகை வழங்கப்படாததால் கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.


Next Story