போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டவில்லை - சென்னை ஐகோர்ட்டு
போதைப்பொருட்கள் புழக்கத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை பெரும்பாக்கம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆய்வுக் குழு ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குறிப்பிட்டு இருந்தது.
அப்போது காவல் துறை தரப்பில், போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதைப்பொருட்கள் கடத்தல் நுண்ணறிவுப் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பிரிவுகளில் 180 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த போலீசின் எண்ணிக்கை போதுமானதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை. போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டவில்லை; காவல்துறையின் அறிக்கை திருப்திகரமாக இல்லை. போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும்.
மாநிலம் முழுவதும் போதைப்பொருட்கள் தாரளமாக கிடைக்கும் சூழலில், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதுமான போலீசாரை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலாளர், டிஜிபிக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.