அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம்; 48 பேர் கைது


அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம்; 48 பேர் கைது
x

அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

முசிறி:

முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. தனியார் பள்ளி ஆசிரியரான இவர், கடந்த வெள்ளிக்கிழமை தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை ஜெம்புநாதபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மறுநாள் காலை மருத்துவமனைக்கு வந்த பெரியசாமியின் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்ததுடன், தமிழக அரசு பெரியசாமியின் குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடர்ந்தது.

இதையடுத்து 2-வது நாளான நேற்று அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் துறையினர், போலீசார் மற்றும் மின்வாரிய துறையினர் உள்ளிட்டோர் பெரியசாமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பெரியசாமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காசோலையை விரைந்து வழங்குவதாகவும், அவரது மனைவிக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கு மேலதிகாரிகளிடம் பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தனர்.

இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிரேத பரிசோதனை கூடம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண் உள்பட 48 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் அரசு மருத்துவமனை டாக்டர் ரமேஷ் தலைமையில் பெரியசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பேரூர் கிராமத்திற்கு கொண்டு சென்று இறுதிச்சடங்குகள் முடிந்து, உடல் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து கைதான 48 பேரையும் மாலையில் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் நேற்றும் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story