உளுந்து கிலோ ரூ.66-க்கு கொள்முதல் செய்ய அரசு முடிவு
உளுந்து கிலோ ரூ.66-க்கு கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உளுந்து கொள்முதல்
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது உளுந்து விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 170 மெட்ரிக் டன் உளுந்து மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 160 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈரப்பதம்
மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.66 என்ற விலையில் உளுந்து கொள்முதல் செய்யப்படும். உளுந்து கொள்முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 29-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
எனவே இத்திட்டத்தில் உளுந்து விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும்.
விவசாயிகளின் உளுந்து கொள்முதலுக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். மத்திய அரசின் கொள்முதல் நிறுவனம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரைத்துள்ளது. அதன்படி உளுந்து நியாயமான சராசரி தரத்தின்படி இருக்க வேண்டும். ஈரப்பதம் 12 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர பொருட்கள் 2 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வண்டு தாக்கிய, உடைந்த பருப்புகள் இருக்கக் கூடாது. தமிழ்நாடு உளுந்து விவசாயிகள் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த உளுந்து கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட உளுந்து விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.