குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
ராமநாதபுரத்தில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் அரசு பஸ் மோதி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவரது மனைவி ராமலட்சுமி தனது கணவரின் இறப்பிற்கு இழப்பீடு கோரி ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராமலட்சுமிக்கு ரூ.19 லட்சத்து 63 ஆயிரம் இழப்பீடு வழங்க கும்பகோணம் கோட்ட போக்குவரத்து நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த இழப்பீடு தொகையை வழங்காததால் ராமலட்சுமி நிறைவேற்றக்கோரும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சீனிவாசன் இழப்பீடு வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்படி நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் இருந்து கட்டளை பணியாளர் அறியவன் அரசு பஸ்சை ஜப்தி செய்ய புதிய பஸ்நிலையத்திற்கு சென்றார். அங்கு ராமேசுவரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். முன்னதாக பஸ்சை ஜப்தி செய்ய ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் ஊழியர்கள் காத்திருப்பதாக தகவல் பரவியது.
இதற்கிடையே ராமேசுவரத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றினை பஸ் டிரைவர் ஜப்தி நடவடிக்கையில் இருந்து காப்பதற்காக பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டாராம். இதனால் பஸ்சில் வந்த பயணிகள் தாங்கள் எவ்வாறு பஸ்நிலையம் செல்வது என்று கேட்டு பஸ்சின் முன் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து துறையினரிடம் விசாரித்தபோது பஸ் பழுது காரணமாக நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.