சாலையோர கற்குவியலில் மோதிய பஸ்
சாலையோர கற்குவியலில் மோதிய பஸ்
மடத்துக்குளம்
உடுமலையில் இருந்து வேடபட்டி வழியாக காரத்தொழுவு வழித்தடத்தில் எண் 29 டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் தினமும் காலை, மதியம், மாலை, இரவு என 4 முறை சென்று திரும்புகிறது. இந்த நிலையில் நேற்று காலை உடுமலையில் இருந்து சென்ற பஸ், கணியூர் ஆஸ்பத்திரி மேடு பகுதியை கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரில் வந்த சரக்கு ஏற்றிய லாரி வந்தது. அங்கு நீண்டு வளர்ந்திருந்த புளியமரத்தின் கிளையில் மோதாமல் இருக்க, லாரி ஓட்டுனர் திடீரென லாரியை வலது புறமாக வளைத்து ஓட்டினார். இதனால் பஸ்சும், லாரியும் மோதும் சூழல் உருவானது. உடனடியாக பஸ்சை டிரைவர் திடீரென்று பிரேக் பிடித்தார். இதனால் நிலை தடுமாறிய பஸ் வலது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு ரோட்டின் ஓரம் கொட்டப்பட்டிருந்த கற்குவியலில் மோதி நின்றது.
அங்கு பெரிய கற்கள் நிறைந்து கிடந்ததால் அதைத் தாண்டி பஸ் செல்லவில்லை. இதனால் அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்புக்குள் பஸ் நுழையாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு பொக்லைன் எந்திரத்தின் உதவியால் பஸ் மீட்கப்பட்டு புறப்பட்டு சென்றது. பின்னர் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டன.