கவர்னர் பதவியை வைத்து அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது: ஜவாஹிருல்லா பேச்சு
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் மறுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேசினார்.
சென்னை,
கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்போது ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறியதாவது;
"தமிழக மக்களின் நலனுக்காக நாம் இயற்றக்கூடிய சட்ட முன்வடிவுகளை நிறுத்திவைப்பதற்கு கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் நலனுக்காக இயற்றப்பட்டுள்ள கோப்புகளை கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் மறுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம்.
மசோதாக்களை நிறைவேற்றாமல் கவர்னர் கிடப்பில் போட்டது தொடர்பாக முதல் அமைச்சர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது வரவேற்கத்தக்கது.
இந்த பிரச்சினை இதோடு நின்றுவிடக்கூடாது. பேரறிஞர் அண்ணா கூறியதுபோல ஆட்டுக்கு தாடி தேவையில்லை.. நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை என்ற திசையை நோக்கி செல்லும்போதுதான், ஒன்றிய அரசின் பிரதிநிதியாக வரக்கூடிய சர்வாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்." இவ்வாறு அவர் பேசினார்.