'நீட்' விலக்கு மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் இனி அவசியம் இல்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் இனி அவசியம் இல்லை என்று தென்காசியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளுக்கான கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
'நீட்' தேர்வுக்கு 100 சதவீதம் விலக்கு பெற்றே தீரவேண்டும் என்பது முதல்-அமைச்சரின் எண்ணம். முதல்-அமைச்சரின் எண்ணம்தான் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எண்ணமும். 'நீட்' விலக்கு மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் காலம் தாழ்த்தி ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பினார். ஜனாதிபதியிடம் இருந்து இப்போது உள்துறை அமைச்சகத்துக்கு சென்றிருக்கிறது.
உள்துறை அமைச்சகம் கேட்கும் விளக்கங்களுக்கு, சட்டரீதியாக நாங்கள் பதில் எழுதி அனுப்பிக்கொண்டிருக்கிறோம். 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்பது இப்போது வரை உயிரோட்டமாக இருக்கிறது. இந்த நிலையில், கவர்னர் மாளிகையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளோடு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 'நீட்' தேர்வு விலக்குக்கு கையெழுத்து போடமாட்டேன் என்று கவர்னர் சொல்கிறார். இனிமேல் 'நீட்' தேர்வு விலக்குக்கும், கவர்னருக்கும் சம்பந்தம் இல்லை.
ஒப்புதல் அவசியம் இல்லை
கவர்னருக்கான பணி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பது மட்டும்தான். அவர் அனுப்பிவைக்க மறுத்ததால் 2-வது முறை மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டது. வேறு வழி இல்லாமல் கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டார். இதோடு அவர் பணி முடிந்துவிட்டது, 'நீட்' தேர்வுக்கும், கவர்னருக்கும் தொடர்பில்லை. அவருடைய ஒப்புதல் என்பது இனி அவசியமும் இல்லை.
இந்த நிலையில் 'நீட்' தேர்வு விலக்குக்கு கையெழுத்து போடமாட்டேன் என்று சொல்வது இன்னும் மக்களை ஏமாற்றும் செயல். ஜனாதிபதி 'நீட்' விலக்குக்கு ஒப்புதல் வழங்கினால், அதற்கான தகவலினை மட்டுமே கவர்னருக்கு தெரிவிப்பார்கள். அனுமதிக்காக அனுப்பமாட்டார்கள். எனவே இனிமேல் எந்த வகையிலும் கவர்னருக்கும், 'நீட்' தேர்வு விலக்குக்கும் தொடர்பில்லை. மீண்டும் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை போல கவர்னரின் கருத்து அபத்தமானது.
எதிர்க்கிறேன்
ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணம் 'நீட்' விலக்கு என்பது. ஆட்சியின் பிரதிபலிப்புகளை, நல்லவற்றை, மக்களுக்கு செய்கின்ற திட்டங்களோடு இணைந்து பயணிப்பது தான் கவர்னருக்கு கடமையாக இருக்கும். அதற்கு நேர்மாறாக, மக்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார். எனவே கவர்னரின் கருத்தை நான் எதிர்க்கிறேன். மறுக்கிறேன். இதனை யாரை அழைத்து பாராட்டு விழா நடத்தினாரோ அந்த குழந்தையின் பெற்றோரே சொல்லியிருக்கிறார்கள். இதிலிருந்தாவது கவர்னர் தெளிவு பெறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.