கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்; கூட்டம் முடியும் முன்பே கவர்னர் வெளியேறியதால் பரபரப்பு


கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்; கூட்டம் முடியும் முன்பே கவர்னர் வெளியேறியதால் பரபரப்பு
x

சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில் உள்ள சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்ததால் அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கூட்டம் முடியும் முன்பே கவர்னர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் (2023) முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது.

போலீஸ் அணிவகுப்பு மரியாதை

இதற்காக, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி, காலை 9.30 மணிக்கு காரில் புறப்பட்டார். காலை 9.50 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கவர்னரின் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டீலும் உடன் வந்தார்.

தொடு திரையில் உரை

சட்டசபை வளாகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை கூட்ட அரங்கத்துக்கு சபாநாயகர் மு.அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் அழைத்து வந்தனர். சரியாக, காலை 10.01 மணிக்கு கவர்னர் அவரது இருக்கைக்கு வந்து, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். அவரது வலதுபுறம் சபாநாயகர் மு.அப்பாவுவும், இடதுபுறம் கவர்னரின் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டீலும் இருக்கையில் அமர்ந்தனர்.

காலை 10.02 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாட கூட்டம் தொடங்கியது. காலை 10.03 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். வழக்கமாக, புத்தகத்தை கையில் வைத்து கவர்னர் உரை நிகழ்த்துவார்கள். இந்த முறை, மேஜையில் இருந்த கம்ப்யூட்டர் தொடு திரையை பார்த்து கவர்னர் உரை நிகழ்த்தினார்.

கவர்னருக்கு எதிராக கோஷம்

ஆரம்பத்தில் சில வார்த்தைகளை அவர் தமிழில் பேசினார். அந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

கவர்னரின் இருக்கைக்கு முன்னால் வந்து, ''எங்கள் நாடு தமிழ்நாடு. வாழ்க தமிழ்நாடு. தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்'' என்று கோஷமிட்டனர். இதனால், சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும், இந்த எதிர்ப்பு கோஷத்தை கண்டுகொள்ளாமல், கவர்னர் ஆர்.என்.ரவி தனது பேச்சை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

தி.மு.க. கூட்டணி கட்சி உறுப்பினர்கள் காலை 10.08 மணிக்கு அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து, பா.ம.க. உறுப்பினர்கள் அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி தலைமையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் அனுமதி வழங்கக் கோரி, இருக்கையைவிட்டு வெளியே வந்து கோஷம் எழுப்பினார்கள். இதனால், அவையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

என்றாலும், கவர்னர் ஆர்.என்.ரவி, இடைவிடாது தனது உரையை ஆற்றினார். சரியாக, காலை 10.48 மணிக்கு நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து, கவர்னரின் உரையை சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்தார். காலை 10.49 மணிக்கு உரையை வாசிக்கத் தொடங்கிய அவர், சரியாக காலை 11.30 மணிக்கு பேசி முடித்தார்.

தீர்மானம் கொண்டு வந்த மு.க.ஸ்டாலின்

ஆனால், இடையில் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அதாவது, கவர்னர் தனது உரையின்போது சில பக்கங்களை படிக்காமல் விட்டுவிட்டதாக தெரிந்தது. இந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென எழுந்து, கவர்னர் உரையின் மீதான தீர்மானத்தை முன்மொழிந்து பேசத் தொடங்கினார். இதனால், அவையில் பரபரப்பு நிலவியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கவர்னருக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் கவர்னருடைய செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டப் பேரவை விதிகளை பின்பற்றி, கவர்னர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் பதிவு செய்யவில்லை.

பேரவையில் மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள கவர்னருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில், நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, கவர்னரால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்.

ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும்

ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐ தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் சபாநாயகரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக கவர்னர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. - பா.ஜ.க.வும் வெளிநடப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சை தொடங்கியபோது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அவையைவிட்டு வெளியேறினர். அதன்பின்னர், பா.ஜ.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நேரத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் இங்கே என்ன பேசுகிறார்? என்று அவரது செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டீலிடம் கேட்டு தெரிந்துகொண்டார். உடனே, காலை 11.32 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென அவையைவிட்டு வெளியேறினார். அவருடன் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டீலும், பாதுகாவலரும் வெளியே சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கவர்னர் வெளியேறினார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி முடித்ததுடன், குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், தேசிய கீதம் பாட காலை 11.35 மணிக்கு சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.

பொதுவாக, கவர்னர் உரையாற்றிவிட்டு, அவையில் இருந்து வெளியே செல்லும்போது, சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் கார் வரை சென்று வழியனுப்புவது வழக்கம். ஆனால், நேற்று கூட்டம் முடியும் முன்பே கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியதால், அவை மரபுப்படி அவருக்கு வழியனுப்பு நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை.

தமிழக சட்டசபை வரலாற்றில் நேற்றைய நிகழ்வுகள் போல், இதற்கு முன்பு நடந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story