கவர்னர் சட்டத்திற்கு புறம்பாக பேசுவதை தவிர்ப்பது நல்லது - சபாநாயகர் அப்பாவு
கவர்னர் சட்டத்திற்கு புறம்பாக பேசுவதை தவிர்ப்பது நல்லது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டை தமிழகம் என கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும் என கவர்னர் ஆர்.என். ரவி கூறியிருப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள சபாநாயகர் அப்பாவு, கவர்னர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசி வருவதாகவும், சட்டத்திற்கு புறம்பாக பேசுவதை அவர் தவிர்ப்பது நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கவர்னர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதன்படி பேச வேண்டும் என்பது என் கருத்து. பல சந்தர்ப்பங்களில் அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான காரியங்களை பேசி விடுகிறார். உதாரணமாக இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, ஆனால் கவர்னர் ஏற்கனவே ஒருமுறை மதச்சார்புள்ள நாடு என்று பொதுவெளியில் பேசினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவிப்பிரமாணம் செய்து கொண்டு சட்டத்திற்கு புறம்பான வார்த்தைகள் பேசுவதை கவர்னர் தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு கூறினார்.