வி.மாமாந்தூரில்ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடம்செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
வி.மாமாந்தூரில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தை செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிகாரிகளுடன் நேரில் சென்று சேதமடைந்த பள்ளியை பார்வையிட்டதுடன், அப்பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட உத்தரவிட்டார். அதன்அடிப்படையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் ஒதுக்கினார். இதையடுத்து 3 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து வி.மாமா ந்தூர், கருந்தலாகுறிச்சி கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் சின்னசேலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் மாயாண்டி, தலைமை ஆசிரியர் பொன்னி மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.