இலவசத்தின் மூலம் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை அரசு நேரடியாக உயர்த்துகின்றது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


இலவசத்தின் மூலம் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை அரசு நேரடியாக உயர்த்துகின்றது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x

இலவசத்தின் மூலம் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை அரசு நேரடியாக உயர்த்துகின்றது என்று திருவண்ணாமலை நகராட்சியில் வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை

இலவசத்தின் மூலம் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை அரசு நேரடியாக உயர்த்துகின்றது என்று திருவண்ணாமலை நகராட்சியில் வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி

திருவண்ணாமலை நகராட்சியின் மூலமாக தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சாலையோரத்தில் சிற்றுண்டி, காய்கறி மற்றும் பூ வியாபாரம் செய்திட வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என். அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளையும், வங்கி கடனுதவிக்கான ஆணைகளையும் வழங்கினார். அதன்படி தேசியநகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 222 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 78 லட்சம் மதிப்பில் சாலையோர சிற்றுண்டி, காய்கறி மற்றும் பூ வியாபாரம் செய்திட தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கடனுதவியாக முதல் கட்டமாக ரூ.4 கோடியே 21 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. 2-ம் கட்டமாக ரூ.1 கோடியே 18 லட்சம் வழங்கப்படுகிறது. அதன்படி 4 ஆயிரத்து 619 பயனானிகளுக்கு மொத்தம் ரூ.5.39 கோடியை வங்கியில் இருந்து கடன் வழங்கி உள்ளனர்.

கடனுதவி பெற்று கொண்ட வியாபாரிகள் இதனை முறையாக பயன்படுத்தி லாபத்தை ஈட்டி கடனை திரும்ப செலுத்தினால் வங்கிகள் உங்களுக்கு தொடர்ந்து உதவியாக இருக்கும்.

இலவசம் என்பதை சில நேரங்களில் கொச்சைப்படுத்தியும், விவாதத்திற்கு உரியதாகவும் பேசுகின்றனர்.

வண்ண தொலைகாட்சி பெட்டி

நான் விவசாயி வீட்டு பிள்ளை. இலவச மின்சாரத்தினால் விவசாயிகள் பலர் பயன்பெற்று வருகின்றனர். இலவசம் என்பது கொச்ைசப்படுத்த முடியாத ஒன்று.

ஏழை, எளிய மக்களை, நடுத்தர மக்களை மேல் தட்டுக்கு கொண்டு வர இலவசம் உதவுகிறது. கலைஞர் இலவசமாக அனைத்து குடும்ப அட்டைக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கியதால் தான் குக்கிரமத்தில் உள்ள மக்களும் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள முடிந்தது. இலவச பஸ் பாஸ் கொடுத்த காரணத்தினால் தான் கிராமத்தில் இருந்த மாணவ, மாணவிகள் நகரத்திற்கு வந்து கல்லூரி படிப்பை படித்தனர்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இலவசத்தின் மூலம் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை அரசு நேரடியாக உயர்த்துகின்றது.

அரசு இலவசமாக கொடுத்த பொருட்களை இலவசமாக கொடுக்கவில்லை என்றால் பொதுமக்கள் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலான குடும்பங்கள் கந்து வட்டிக்கு ஆளாக நேரிடும். கந்து வட்டி ஆளாக்கப்பட்ட தற்கொலை முயற்சியை மேற்கொள்கின்றனர். தற்கொலைக்கு முயற்சிப்பதையும், கந்து வட்டி வாங்குவதையும் அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக குடும்பத்திற்கு தேவயைான நியாயமான செலவுகளை இலவசமாக கொடுக்கின்றது.

சமத்துவமான குடும்பம்

தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களை அரசாங்கம் சமத்துவமான குடும்பமாகவும், சமூக நீதி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கருகிறது. அதனால் இந்த இலவசங்களை குடும்பத்திற்கு குடும்பம் இந்த மாநில அரசாங்கம் கொடுக்க தான் செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நீலேஸ்வர், தடகள சங்க மாநில துணை தலைவர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை ஒன்றிக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, துணைத் தலைவர் ரமணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், நிர்வாகிகள் அருணை வெங்கட், பிரியாவிஜயரங்கன், வெற்றிடிஜிட்டல் கார்த்தி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஷெரீப், 27-வது வார்டு பி.ஜி.முருகன், 32-வது வார்டு க.ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி குட்டி புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் நன்றி கூறினார்.


Next Story