அரசு பஸ் டிக்கெட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்ததால் பரபரப்பு


அரசு பஸ் டிக்கெட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்ததால் பரபரப்பு
x

ஜெயங்கொண்டத்தில் அரசு பஸ் டிக்கெட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூர்

அரசு பஸ் டிக்கெட்டுகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் பஸ்களில் எந்திரத்தின் மூலம் 'பஸ் டிக்கெட்' வழங்கப்பட்டாலும் 40 சதவீத பஸ்களில் டிக்கெட் கிழித்தே வழங்கப்படுகிறது. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள விசாலாட்சி நகரில் அரசு பஸ்சில் வழங்கப்படும் டிக்கெட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சேலம் மற்றும் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பஸ் டிக்கெட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தன. ரூ.280 முதல் 1 ரூபாய் டிக்கெட் வரை 300-க்கும் மேற்பட்ட அரசு பஸ் டிக்கெட்டுகள் கிடந்தன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலி டிக்கெட்டுகளா?

அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான டிக்கெட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து டிக்கெட்டுகளை நடத்துனர்களுக்கு வழங்கும் போது டிக்கெட்டின் எண்கள் உள்ளிட்டவற்றை குறித்து கொண்டே நடத்துனருக்கு வழங்கப்படுகிறது. மேலும் நடத்துனர்கள் இரவு நேரங்களில் கணக்கை ஒப்படைக்கும் போது டிக்கெட்டுகளின் எண்களின் அடிப்படையில் கணக்கை ஒப்படைக்க வேண்டும்.

எனவே அரசின் சார்பில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறும் சமூக ஆர்வலர்கள், பஸ்களில் வழங்குவதற்காக போலியாக டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு இவ்வாறு சிதறி கிடக்கின்றனவா? என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக அரசு பஸ்சை சிலர் மொத்தமாக டிக்கெட் வாங்கி பயணிப்பது வழக்கம். அதுபோல் அந்த பகுதியில் திருமணம் அல்லது மற்ற சுபநிகழ்ச்சிக்காக யாரேனும் மொத்தமாக டிக்கெட் வாங்கி பயணித்து இருக்கலாம். அந்த டிக்கெட்டை இங்கு வீசி சென்று இருக்கலாம் என்றார்.


Next Story