நாகர்கோவில் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது


நாகர்கோவில் அருகே  அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது
x

நாகர்கோவில் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைத்தது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவில் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைத்தது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பஸ் கண்ணாடி உடைப்பு

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை மணக்குடி நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை கணபதிபுரம் அருகே உள்ள தெக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 51) என்பவர் ஓட்டினார். மாலை நேரம் என்பதால் பஸ்சில் ஏராளமான மாணவ, மாணவிகள் இருந்தனர்.

தெங்கம்புதூர் பஸ் நிறுத்தத்தை சென்றடைந்ததும் அந்த பஸ் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த பஸ்சில் இருந்து பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது வாலிபர் ஒருவர் கல்வீசினார். இதில் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஸ் மீது கல் வீசிய வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் தெங்கம்புதூர் அருகே உள்ள பால்குளம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 40) என்பதும், மதுபோதையில் பஸ் மீது கல்வீசியதும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story