இரும்பு கம்பியால் தாக்கியதில் அரசு பஸ் டிரைவர் காயம்
இரும்பு கம்பியால் தாக்கியதில் அரசு பஸ் டிரைவர் காயமடைந்தார்.
திருச்சி மாவட்டம், லால்குடி பச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 33). இவர் திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அரசு போக்குவரத்து கழக மலைக்கோட்டை பணிமனையில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் நோக்கி அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார். வழியில் ஒரு தனியார் நிறுவனம் முன் கன்டெய்னர் லாரி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி சரக்குகளை இறக்கியதாக தெரிகிறது. இதனால் பஸ் டிரைவர் சந்தோஷ், லாரியை நகர்த்தும்படி தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதன் காரணமாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த நிறுவன ஊழியர்கள் முகமது அன்வர்ராஜா (31), அரவிந்த் (39) ஆகியோர் அரசு பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த பஸ் டிரைவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேரையும் கைது செய்து 12-ந்தேதி வரை சிறையில் அடைத்தனர்.