அரசு பஸ்மோதி டீ மாஸ்டர் பலி


அரசு பஸ்மோதி டீ மாஸ்டர் பலி
x

செஞ்சி அருகே அரசு பஸ்மோதி டீ மாஸ்டர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு காலதாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

விழுப்புரம்

செஞ்சி

டீ மாஸ்டர்

செஞ்சி பெரியகரம் ரங்கசாமி தெருவை சேர்ந்தவர் ராமன் மகன் செந்தில்நாதன்(வயது 36). டீ மாஸ்டரான இவர் தனது நண்பர்களுடன் கலத்தம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் செஞ்சி செல்வதற்காக நேற்று அதிகாலை பாலப்பாடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த செந்தில்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அவரது மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் செஞ்சி அரசு ஆஸ்பத்திரி பிண அறையில் வைக்கப்பட்ட செந்தில் நாதனின் உடலை பிரேத பரிசோதனை செய்து தர காலதாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் செஞ்சி அரசு ஆஸ்பத்திரி எதிரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story