கோரைப்புல் அறுவடை பணிகள் தீவிரம்


கோரைப்புல் அறுவடை பணிகள் தீவிரம்
x

கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் கோரைப்புல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் கோரைப்புல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

கோரைப்புல் சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ஓலையாம் புத்தூர், தைக்கால், கீழமாத்தூர், குன்னம் பெரம்பூர், சோதியக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கோரைப்புல் சாகுபடி செய்யப்பட்டது.

ஆறு மாத கால பயிரான கோரைப்புல், யூரியாவை பயன்படுத்தி வளர்க்கப்படுகிறது. இது வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய பயிராக இருந்தாலும், ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்ததால் கோரைப்புல் வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்தது.

அறுவடை பணி தீவிரம்

தற்போது கோரைப்புல் 6 அடி உயரத்தில் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. குன்னம் பகுதியில் கோரைப்புல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு விளைவிக்கப்படும் கோரைப்புல் சிதம்பரம், சீர்காழி, திருச்சி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கோரைப்புல்லை வாங்கி செல்லும் வியாபாரிகள், இதை பாய் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.

இதுகுறித்து குன்னம் கிராமத்தை் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

பதப்படுத்தி விற்பனை

கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவில் கோரைப்புல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்படும் கோரைப் புல்லை பதப்படுத்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை வியாபாரிகள் வாங்கி சென்று வெந்நீரில் சாயம் நனைத்து பக்குவப்படுத்தி பல்வேறு வண்ணங்கள் இட்டு பாய் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது

தைக்கால், புத்தூர், சேந்தங்குடி, கொள்ளிடம் ஆகிய கிராமங்களில் அதிக அளவில் பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. தைக்காலில் பின்னப்படும் பாய்கள் பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் பாயின் விலை ரூ.50 முதல்ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பாய் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இந்த பாய் திருமணம் மற்றும் வீட்டு சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காக அதிக அளவில் வாங்கி செல்கின்றார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story