வயல்களில் சட்டவிரோத மின்வேலி அமைத்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கைதர்மபுரி மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை


வயல்களில் சட்டவிரோத மின்வேலி அமைத்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கைதர்மபுரி மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 July 2023 12:30 AM IST (Updated: 28 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

விவசாய வயல்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சட்டப்படி நடவடிக்கை

தர்மபுரி மாவட்டம் தீர்த்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராம்குமார், கவுரன் ஆகியோர் வயலில் அமைத்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காட்டுப்பன்றி உயிரிழந்தது. இதுதொடர்பாக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க வனத்துறை, வருவாய்துறை மற்றும் மின்சார துறை அலுவலர்கள் இணைந்து ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாய வயல்களில் மனிதர்கள், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மின்இணைப்பு மின்வாரியத்தால் துண்டிக்கப்படும்.

குண்டர் சட்டம்

வனவிலங்குகளை வேட்டையாடுதல், வனவிலங்குகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story