நாய் குட்டிகளை பாதுகாத்த நல்லபாம்பு
கடலூர் அருகே நாய் குட்டிகளை நல்லபாம்பு பாதுகாத்தது. அதன் அருகில் தாய் நாயையும் அனுமதிக்கவில்லை
நெல்லிக்குப்பம்
நாய் குட்டிகளுக்கு பாதுகாப்பு
கடலூர் அருகே உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவர், அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக தோண்டப்பட்ட 5 அடி ஆழமுள்ள பள்ளத்தில் ஒரு நாய், 3 குட்டிகளை ஈன்றது. நேற்று முன்தினம் மாலையில் அந்த தாய் நாய், உணவுக்காக குட்டிகளை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றது.
அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு, அந்த பள்ளத்துக்குள் விழுந்தது. அங்கு 3 நாய் குட்டிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. உடனே அந்த நல்லபாம்பு, தனது வாலால் 3 நாய் குட்டிகளையும் சுற்றி தனது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தது.
தாய் நாயையும் அனுமதிக்கவில்லை
இதனிடையே உணவுக்காக சென்றிருந்த தாய் நாய், தனது குட்டி இருந்த பள்ளத்துக்கு வந்தது. இதை பார்த்த நல்ல பாம்பு சீறியபடி, தாய் நாயை கடிக்க சென்றது. உடனே அந்த நாய், பள்ளத்தில் இருந்து வேகமாக வெளியேறியது. பின்னர் அந்த நாய், நல்ல பாம்பை பார்த்து குரைத்துக்கொண்டே இருந்தது. உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள், அங்கு சென்று பார்த்தனர். அந்த நாய்குட்டிகளை நல்ல பாம்பு பாதுகாத்து, அதன் அருகில் யாரையும் நெருங்க விடாமல் கம்பீரமாக படம் எடுத்தபடி நின்றது. தனது குட்டிகளை மீட்க சென்ற தாய் நாயையும் அருகில் வர விடாமல் அரண்போன்று நல்ல பாம்பு நின்றது. இதை பார்த்து பிரம்மிப்படைந்த மக்கள், ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் தாய் நாயோ, தனது குட்டிகளை அந்த நல்லபாம்பு எதாவது செய்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பள்ளத்தை சுற்றி, சுற்றி வந்து குரைத்தது.
பாம்பு பிடிபட்டது
தாய் நாயின் பாசத்தை உணர்ந்த கிராம மக்கள், பாம்பை விரட்டிவிட்டு நாய் குட்டிகளை மீட்க போராடினர். ஆனால் அவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. எனவே இது குறித்து கடலூர் வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வன ஆர்வலர் செல்லா விரைந்து சென்று, லாவகமாக நல்லபாம்பை பிடித்தார். இதையடுத்து தாய் நாய், தனது குட்டிகளிடம் சென்றது. பின்னர் அந்த நல்ல பாம்பு அருகில் உள்ள காட்டில் விடப்பட்டது.