தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறுவது யார்?


தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறுவது யார்?
x

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் தேவர் சிலைக்கு அணிவிக்கும் தங்க கவசத்தை வங்கியில் இருந்து யார் பெறுவது? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தேவர் நினைவாலய நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ராமநாதபுரம்

கமுதி,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் தேவர் சிலைக்கு அணிவிக்கும் தங்க கவசத்தை வங்கியில் இருந்து யார் பெறுவது? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தேவர் நினைவாலய நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தங்க கவசம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூைஜ விழா விரைவில் நடைபெற உள்ளது.

இதையொட்டி அங்குள்ள தேவர் நினைவிடத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்க முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க. சார்பில் தங்கக்கவசம் வழங்கி இருந்தார். இந்த தங்கக்கவசம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவின்போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு, விழா முடிந்ததும் மதுரையில் உள்ள வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.

இதன்படி அ.தி.மு.க. பொருளாளர் மற்றும் நினைவாலய பொறுப்பாளர்கள் வங்கியில் இருந்து கவசத்தை எடுப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கட்சியின் பொருளாளர் என்ற முறையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நினைவாலய பொறுப்பாளர்கள் வங்கியில் இருந்து தங்ககவசத்தை பெற்றனர்.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதால், தங்க கவசத்தை வங்கியில் இருந்து யார் பெறுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

ஆதரவு கடிதம் கேட்டனர்

இதையடுத்து இதுதொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், நத்தம் விசுவநாதன், காமராஜ், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், பாஸ்கரன் மற்றும் அ.தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, செந்தில்நாதன், கிருஷ்ணன் முரளி என்ற குட்டியப்பா உள்பட அ.தி.மு.க.வினர் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜனை சந்தித்து வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெற தங்களுக்கு ஆதரவு கடிதம் தருமாறு கேட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் பின்னர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதுசம்பந்தமாக நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் கூறுகையில்,, சட்டப்பூர்வமாக வங்கி நடைமுறைக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக பேச்சுவார்த்தையில் கமுதி ஒன்றிய செயலாளர் எஸ்.பி. காளிமுத்து, அவைத்தலைவர் பம்மனேந்தல் சேகரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கருமலையான், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தோப்படப்பட்டி பூமிநாதன், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் பசும்பொன் தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் பரமக்குடி நாகராஜன், ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நிர்மல் குமார் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.


Next Story