படகில் கடத்தி வந்த தங்கக்கட்டிகள் கடலில் வீசப்பட்டதா?
கடலோர காவல் படையினரை பார்த்ததும் படகில் கடத்தி வந்த தங்கக்கட்டிகளை கடலில் வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், நடுக்கடலில் தேடும் பணி நடக்கிறது. பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பனைக்குளம்,
கடலோர காவல் படையினரை பார்த்ததும் படகில் கடத்தி வந்த தங்கக்கட்டிகளை கடலில் வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், நடுக்கடலில் தேடும் பணி நடக்கிறது. பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கடல்வழி கடத்தல்
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியானது, இலங்கைக்கு மிக அருகே உள்ளது.
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி, ராமேசுவரத்துக்கு அகதிகளாக மக்கள் அவ்வப்போது வருகிறார்கள். அதே நேரத்தில் ராமநாதபுரம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கும், இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் கடல் வழி கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும், கடல் அட்டை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், பீடி இலை, மஞ்சள் போன்றவை இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. இதே போல் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்களும் நடக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை படகில் கடத்தி வரும்போது, கடலோர காவல் படையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் சுமார் 15 கிலோ தங்கத்தை கடலில் வீசியதும், கடலோர காவல் படையினர் அதை கடலில் தேடி கண்டுபிடித்து கைப்பற்றியதும் மிகவும் பரபரப்பு நிகழ்வாக பேசப்பட்டது.
அதே போன்றதொரு சம்பவம் மீண்டும் தற்போது நடைபெற்று இருக்கலாம் என கடலோர காவல் படையினர் கூறுகிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
கடலில் வீசினர்
தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக மண்டபத்துக்கு படகில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் மண்டபம் இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு ரோந்து கப்பலில் விரைந்து சென்றனர். இந்திய கடலோர காவல் படை கப்பலை கண்டதும், படகு ஒன்றில் இருந்தவர்கள், திடீரென சில பொருட்களை கடலில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
தங்கக்கட்டிகள்?
இதையடுத்து கடலோர காவல் படையினர் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த 3 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, அவர்கள் இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த பொருளைத்தான் கடலில் வீசியது தெரியவந்தது. அவை தங்கக்கட்டிகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து இந்திய கடலோர காவல் படையின் ஸ்க்யூபா டைவிங் (கடல் மூழ்கு நீச்சல்) பயிற்சி பெற்ற வீரர்கள் மூலம் கடலில் வீசப்பட்ட அந்த பொருட்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அந்த பொருட்கள் கைப்பற்றிய பின்னரே அவை தங்கக்கட்டிகளா? அல்லது வேறு ஏதேனும் பொருட்களா? என்பது குறித்து தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பிடிபட்டவர்களில் ஒருவர் மண்டபத்தை சேர்ந்தவர் எனக்கூறப்படுகிறது. அவர் உள்பட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.