நரிக்குறவர் சமுதாய மாணவனுக்கு தங்கப்பதக்கம்


நரிக்குறவர் சமுதாய மாணவனுக்கு தங்கப்பதக்கம்
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:46 PM GMT)

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் நரிக்குறவர் சமுதாய மாணவனுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் சாமுவேல் என்ற நரிக்குறவ சமுதாய மாணவன் கோவா மாநிலத்தில் கடந்த 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடந்த 'நேஷனல் பெடரேஷன் கப் 2023' க்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாட்டிற்காக கலந்து கொண்டு விளையாடினார். இறுதிப்போட்டியில் தெலுங்கானா மாநிலத்துடன் மோதி சாமுவேல் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், மாநில போட்டியில் தங்கப்பதக்கம் வென்று ரெயில் மூலம் சொந்த ஊர் திரும்பிய மாணவனுக்கு மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நரிக்குறவர் சமுதாயத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர். பள்ளி நிர்வாகி விஜயசுந்தரம் தலைமையில் ரெயில் நிலையம் வந்த அந்த மக்கள், வெற்றி பெற்ற மாணவன் சாமுவேல், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு சால்வை அணிவித்தும், மாணவனுக்கு பாசி, ஊசி மணி மாலை அணிவித்து வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர். மேலும் பல்வேறு போட்டிகளில் விளையாடி தங்கப்பதக்கம் வென்று வரும் மாணவனுக்கு அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story