கோகுல்ராஜ் கொலை வழக்கு: உண்மையை கூற சுவாதிக்கு இரண்டு வாரம் வாய்ப்பு - மதுரை ஐகோர்ட்டு
கோகுல்ராஜ் கொலை வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட்டு.
மதுரை,
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து யுவராஜ் உட்பட 10 பேரும் வழக்குத் தொடர்ந்தனர். இதை எதிர்த்து, கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிடிஐ போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை மதுரை ஐகோர்ட்டு விசாரணை நடத்திய நிலையில், பிறழ்சாட்சியான சுவாதி ஆஜரானார்.
அப்போது, சிசிடிவியில் கோகுல்ராஜூடன் உள்ளது தாம் இல்லை என சுவாதி மறுப்பு தெரிவித்தார். உண்மைக்கு மாறான தகவல்களை சுவாதி அளிப்பதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சுவாதி 2வது முறையாக ஆஜரானார். அப்போது, முந்தைய விசாரணையின் போது அளித்த வாக்குமூலத்தில் மாற்றம் எதுவும் உள்ளதா என்று சுவாதியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு இல்லை என்று சுவாதி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து பேசிய நீதிபதிகள், நீதிமன்றத்திற்கு தவறான தகவலை சுவாதி அளித்துள்ளார் என்றும், பட்டதாரியான சுவாதி அனைத்தையும் புரிந்துக்கொண்டே பொய் கூறுவது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தற்போது கூறிய வாக்குமூலத்தின் மூலம், நீதித்துறை நடுவர் முன்பு அளித்த தகவல்கள் தவறானவை என்றே கருதப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர். சுவாதிக்கு மறுவாய்ப்பு அளித்தும், அவர் உண்மையை தெரிவிக்கவில்லை என்றும், இதை நீதிமன்றம் கண்டும் காணாமல் கடந்து செல்ல இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்ததற்கான முகாந்திரம் உள்ளதால், சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவித்தனர். இதுகுறித்து சுவாதி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். உண்மையை கூற சுவாதிக்கு வாய்ப்பளிக்க இரண்டு வாரம் அளிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.