ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி வடலூர் வாரச்சந்தையில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை
வடலூர்
வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆடு சந்தை நடைபெறுவது வழக்கம். பக்ரீத்பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று வடலூர் வார சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. இதையொட்டி வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, பண்ருட்டி, காடாம்புலியூர், வானதிராயபுரம், வடக்குத்து, தம்பிப்பேட்டை, சேத்தியாதோப்பு, மருவாய், கல்குணம், அகரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த வெள்ளாடு, கொடிஆடு, செம்மறி ஆடு ஆகிய ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவற்றை வாங்கி செல்வதற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், சென்னை, மதுரை, அரியலூர், ராமநாதபுரம், தேனி, விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகாலை முதலிலே குவிந்தனர். இதனால் சந்தை பரபரப்புடன் காணப்பட்டது.
பின்னர் அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல், அதிகபட்சம் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. நேற்று நடைபெற்ற வாரசந்தையில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.