சிறுவாச்சூர் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை


சிறுவாச்சூர் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
x

சிறுவாச்சூர் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

பெரம்பலூர்

சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தை

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வரும். இந்த ஆடுகளை வாங்க ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறுவாச்சூரில் ஆட்டுச்சந்தை தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடு வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர்கள் லாரி, ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிகாலையில் இருந்தே சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் குவிய தொடங்கினர்.

ரூ.15 லட்சத்துக்கு விற்பனை

நாளை (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் குர்பானி கொடுக்க ஆடுகளை வாங்க முஸ்லிம்கள் ஏராளமானோர் சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் ஆட்டுச்சந்தை களை கட்டியது. மேலும் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஆடுகள் வளர்ப்போர், வியாபாரிகள் வந்திருந்தனர்.

அவர்கள் ஆடுகளை பேரம் பேசி வாங்கி, இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சென்றனர். ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையானது. நேற்று மட்டும் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், சுமார் ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.


Next Story