ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 27 Jun 2023 1:00 AM IST (Updated: 27 Jun 2023 3:33 PM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனி

ஆண்டிப்பட்டி சந்தை

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது.

இந்த சந்தையில் தேனி, ஆண்டிப்பட்டி, கம்பம், பெரியகுளம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

ரூ.2 கோடிக்கு விற்பனை

இந்நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி ஆண்டிப்பட்டி சந்தையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதில் வெள்ளாடுகளை காட்டிலும் செம்மறி ஆடுகளை வியாபாரிகள் அதிகம் வாங்கி சென்றனர்.

செம்மறி ஆடுகள் 15 கிலோ எடை கொண்டது ரூ.16 ஆயிரத்துக்கும், வெள்ளாடுகள் 15 கிலோ எடை கொண்டது ரூ.12 ஆயிரத்துக்கும் விற்பனையானது. வியாபாரிகள் ஆடுகளை பரிசோதித்து வாங்கி சென்றனர். நேற்று செம்மறி ஆடுகள் விற்பனை அதிகரித்தது. இதனால் கால்நடை வளர்ப்பவர்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்

இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, ஒரே நாளில் ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது என்றனர்.


Next Story