குண்டடம் வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை


குண்டடம் வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி குண்டடம் வாரச்சந்தையில் நேற்று ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

திருப்பூர்

பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி குண்டடம் வாரச்சந்தையில் நேற்று ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

குண்டடம் வாரச்சந்தை

வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் திருப்பூர் மாவட்டம் குண்டடம் வாரச்சந்தைக்கு குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உள்ளூர் வியாபாரிகள் மூலம் செம்மறி கிடாய்கள் மற்றும் வெள்ளாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இங்கு ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்கும் கொண்டு செல்கின்றனர்.

வாரந்தோறும் குண்டடம் சந்தைக்கு 1,500 ஆடுகள் முதல் 2ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். விற்பனைக்கு வரும் அனைத்து ஆடுகளும் காலை 8 மணிக்குள் விற்றுத் தீர்ந்துவிடும். ஆனால் கடந்த 2 வாரங்களாக ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்ததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இதுபற்றி பெரியப்பட்டியை சேர்ந்த வியாபாரி சதீஷ் கூறியதாவது:- பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்தவாரம் அதிகளவில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்காக செம்மறிக்கிடாய்கள் கொண்டு வந்ததால் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

ரூ.4 கோடிக்கு விற்பனை

நல்ல கொம்புடன் கூடிய 30 கிலோ எடை உள்ள செம்மறிக்கிடாய் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. கொம்பு இல்லாத செம்மறிக்கிடாய்கள் ரூ.17 ஆயிரம் வரை விற்பனையானது.நேற்று சந்தையில் மொத்தம் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

பொதுவாக பக்ரீத் பண்டிகை என்றாலே முஸ்லிம்கள் குண்டடம், கன்னிவாடி, மண்மேடு உள்ளிட்ட ஆட்டு சந்தைகளுக்கு நேரடியாக சென்று கிடாய்களை நல்ல விலைகொடுத்துவாங்கிச்செல்வது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக வாங்கி விற்கும் வியாபாரிகள் சந்தைகளுக்கு சென்று கிடாய்களை குறைந்த விலைக்கு வாங்கி கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம் போன்ற ஊர்களில் உள்ள முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்களில் கிடாய்களை கொண்டு சென்று விற்று நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர்.

முஸ்லிம்கள் வசிக்கும் இடம் அருகேயே விற்பதால் அவர்களும் நல்ல விலைகொடுத்து வாங்கிச்செல்கின்றனர். இதனால் முஸ்லிம்கள் பெருமளவில் சந்தைக்கு வராததால் வாங்கி விற்கும் வியாபாரிகள் மிக குறைந்த விலை கேட்டு வாங்கி செல்கின்றனர். வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story