கிருஷ்ணகிரியில் பெண்களுக்கான கோலப்போட்டி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர். மேலும் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, நாய் கண்காட்சி, ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று சமூக நலத்துறை சார்பில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பெண்கள் மற்றும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் என 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், புதுமைப்பெண் திட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் என்ற தலைப்புகளில் கோலங்கள் வரையப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை 10 ஒன்றியங்களைச் சேர்ந்த மகளிர் ஊர்நல அலுவலர்கள் செய்திருந்தனர். கோலங்களை மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலட்சுமி பார்வையிட்டு நடுவராக செயல்பட்டார். சிறந்த கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாங்கனி கண்காட்சி நிறைவு விழாவில் பரிசு வழங்கப்பட உள்ளது.