முதன்மை கல்வி அலுவலகம் மீது ஏறி மாணவர்கள் தற்கொலை மிரட்டல்


முதன்மை கல்வி அலுவலகம் மீது ஏறி  மாணவர்கள் தற்கொலை மிரட்டல்
x

நெல்லையில் முதன்மை கல்வி அலுவலகம் மீது ஏறி மாணவர்கள் தற்கொைல மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி

நெல்லையில் முதன்மை கல்வி அலுவலகம் மீது ஏறி மாணவர்கள் தற்கொைல மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்ச்சி சான்றிதழ் வழங்கக்கோரி...

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு மாணவர் பிளஸ்-1 வகுப்பும், அவருடைய தம்பி 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக, அப்போது அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.

ஆனால், சகோதரர்கள் இருவரையும் மட்டும் தேர்ச்சி பெற்றதாக பள்ளி நிர்வாகம் அறிவிக்கவில்லை என்றும், இதற்கு சரியான காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த சகோதரர்கள் தங்களை தேர்ச்சி பெற்றதாக அறிவித்து பள்ளி நிர்வாகம் சான்றிதழ் வழங்கக்கோரி, கடந்த பிப்ரவரி மாதம் அம்பையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், சகோதரர்கள் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தனர்.

தற்கொலை மிரட்டல்

இந்த நிலையில் அந்த சகோதரர்கள் நேற்று நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மாடியில் ஏறிய சகோதரர்கள் அங்கிருந்து கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சேதுவாசிவன் மற்றும் போலீசார், பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தற்கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் விரைவில் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மாடியில் இருந்து சகோதரர்கள் கீழே இறங்கி வந்தனர். அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story