போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்துக்குபூட்டு போட்ட அதிகாரிகள்
நெல்லையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் எப்போதும் போல் விநாயகர் சிலைகள் வைக்கப்படக்கூடிய இடங்களில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சிலை அமைக்கும் கூடம்
நெல்லை மாநகர பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக பாளையங்கோட்டை கிருபாநகர் பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களிலும், வர்ணங்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு சிலைகள் வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது.
மாதிரி ஆய்வு
இதற்கிடையே கடந்த 3 நாட்களாக நெல்லை மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விநாயகர் சிலை செய்யும் கிருபாநகர் பகுதியில் உள்ள தயாரிப்பு கூடத்திற்கு சென்று ஆய்விற்காக பல்வேறு மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு விநாயகர் சிலை செய்யும் கூடத்திற்கு மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 'சீல்' வைக்க போவதாக தகவல் பரவியது. இதையடுத்து விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகள் குவிந்தனர். அதே நேரத்தில் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
பூட்டுப்போட்ட அதிகாரிகள்
மேலும் விநாயகர் சிலை தயாரிக்க முன்பணம் கொடுத்த இந்து அமைப்பினர் 10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்ட சிலைகளை ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அந்தந்த பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், ஏற்கனவே விநாயகர் சிலை தொடர்பாக மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரும் வரை சிலைகளை எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது என கூறி தயாரிப்பு கூடத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் அமைத்து பூட்டுப்போட்டனர்.
வாக்குவாதம்
இதற்கிடையே, வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகளையும் ஆங்காங்கே தடுத்து நிறுத்திய போலீசார் மீண்டும் தயாரிப்பு கூடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இதுபற்றி அறிந்த இந்து முன்னணி மாநில துணைத்தலைர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாநகர உதவி போலீஸ் கமிஷனர்கள் பிரதீப், சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.