'மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

சர்ச்சைக்குரிய படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி மணிகண்டன் இயக்கிய 'கடைசி விவசாயி' படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்த்திபன் இயக்கிய 'இரவின் நிழல்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மாயவா தூயவா' பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருது கிடைத்துள்ளது.

'கருவறை' ஆவணப்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா விருது வென்றுள்ளார். சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் 'சிற்பிகளின் சிற்பங்கள்' படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'கடைசி விவசாயி' படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான 'நர்கீஸ் தத்' விருதை 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் வென்றுள்ளது. இந்த படத்தில் நடித்த பல்லவி ஜோஷிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விருது வென்ற திரைத்துறை கலைஞர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-

"தமிழில் சிறந்த படமாக தேர்வாகியிருக்கும 'கடைசி விவசாயி' படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! மேலும் 'இரவின் நிழல்' படத்தில் 'மாயவா தூயவா' பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், 'கருவறை' ஆவணப்படத்துக்காக சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள 'சிற்பிகளின் சிற்பங்கள்' படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான 'நர்கீஸ் தத்' விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளை காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


#69thNationalFilmAwards -இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் #கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! @VijaySethuOffl #Manikandan #நல்லாண்டி

மேலும், #இரவின்நிழல் படத்தில் 'மாயவா சாயவா' பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள @shreyaghoshal,… pic.twitter.com/Bc2veRY5gs

— M.K.Stalin (@mkstalin) August 24, 2023 ">Also Read:


Next Story