இலவச கன்றுகளை வழங்கி, தென்னை விவசாயத்தை ஊக்குவியுங்கள்: ``கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையை வழங்குங்கள்''- விவசாயிகள் கோரிக்கை


இலவச கன்றுகளை வழங்கி, தென்னை விவசாயத்தை ஊக்குவியுங்கள்: ``கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையை வழங்குங்கள்- விவசாயிகள் கோரிக்கை
x

இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்கி, மதுரை மாவட்டத்தில் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்குமாறும், கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை


இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்கி, மதுரை மாவட்டத்தில் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்குமாறும், கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்னை விவசாயம் பாதிப்பு

விவசாயமே நாட்டின் முதுகெலும்பாக இருந்தபோதிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகத் தான் உள்ளது. ஒருபுறம் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. மறுபுறம் வறட்சியால் விளைநிலங்கள் வறண்டு வருகின்றன.

வறட்சியின் காரணமாக தென்னை போன்ற விவசாய பயிர்கள் அழிந்து வருகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை 1½ லட்சம் தென்னை மரங்கள் தண்ணீரின்றி கருகிவிட்டன.

இதனால் அந்த தோப்புகளுக்கு சொந்தக்காரர்கள் மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்கள் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்று கூலி வேலை பார்த்து வருகின்றனர். இதற்கு ஒரு முடிவு கட்டக்கோரி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

தேங்காய் ஏலம்

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட பொருளாளரும், ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான சீதாராமன் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக ஓரளவு பருவமழை கைகொடுத்து வருவதால் தென்னை விவசாயம் மீண்டு வருகிறது. வாடிப்பட்டி பகுதியில் தென்னை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேங்காயை ஏலம் விடுகின்றனர். அவற்றை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கிறது. நேரடியாக வியாபாரிகளிடம் தேங்காய்களை விற்கும்போது, நஷ்டத்தையே சந்திக்க நேரிட்டது.

கூடுதல் விலை வழங்குங்கள்

கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. கொப்பரைத் தேங்காயை ஏலம் விடும்போது, 40, 60, 70 ரூபாய் என ஏலம் போகிறது. ஆனால் ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டுமே கொப்பரை கொள்முதல் செய்கிறார்கள். மேலும் மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.105.90-க்கு கொள்முதல் செய்யப்படுவதில்லை.

இதனால் விவசாயிகள் நஷ்டத்தையே சந்திக்கிறார்கள். எனவே கொப்பரை தேங்காயை ஆண்டுமுழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும்.

மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கு கொப்பரைத்தேங்காயை கொள்முதல் செய்வது அவசியம். கொப்பரைத் தேங்காய்யைப்போல உரிக்காத தேங்காய்களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலவச கன்றுகள்

இதேபோல கடந்த சில வருடங்களுக்கு முன்பு வறட்சியின் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேலான தென்னை மரங்கள் கருகிவிட்டன. பெரும்பாலான தென்னை விவசாயிகள், விவசாயத்தையே கைவிட்டுவிட்டனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக தென்னை விவசாயம் நடக்கிறது. இந்த பகுதியில் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க, கொச்சி தென்னை வளர்ச்சி வாரியத்தில் இருந்து இலவச தென்னங்கன்றுகளை வழங்கி, உரிய வசதிகளை செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story