போலியோ இல்லாத இந்தியா தொடர குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குங்கள் - அன்புமணி ராமதாஸ்


போலியோ இல்லாத இந்தியா தொடர குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குங்கள் - அன்புமணி ராமதாஸ்
x

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

சென்னை,

பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகள், மதிய உணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் இதற்காக 43,051 மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

போலியோ நோய் குழந்தைகளைத் தாக்கி முடமாக்கி விடும். போலியோவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் மிக நீண்டது. ஆனால், போலியோ ஒழிப்பில் வெற்றி கிடைக்காத நிலையில், மத்திய சுகாதார அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் ஆண்டுக்கு 17.20 கோடி குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து கொடுத்ததன் பயனாகவே 2011-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் நாள் போலியோ ஒழிக்கப்பட்டது. போலியோ ஒழிப்புக்காக விருது பெற்ற மகிழ்ச்சியும், பெருமையும் இன்றும் என மனதில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

போலியோ இல்லாத இந்தியா என்ற பெருமை 14 ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்தப் பெருமை தொடர வேண்டுமானால், 5வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்படுவதை உறுதி செய்வோம்; அதை மக்கள் இயக்கமாகவே மாற்றுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story