ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு: நில உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
11 ஆண்டு காலம் நடைபெற்ற இந்த வழக்கில், நில உரிமையாளர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.
ஆரணி,
ஆரணி அடுத்த புலவன் பாடி கிராமத்தில் சேர்ந்தவர் மலர் கொடி. கடந்த 28-9- 2013-ல் மலர்க்கொடி தனது மகள் தேவியுடன்(வயது 4) தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தேவி அருகில் உள்ள நிலத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் (போர்வெல்) விழுந்து தத்தளித்தார்.
அவரை மீட்க தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் இணைந்து போராடி சுமார் 12 மணி நேரம் கழித்து மீட்டனர். பின்னர் மீட்டக்கப்பட்ட குழந்தையை வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டது.
அங்கு சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக இறந்தார் . இது குறித்து மலர் கொடி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நில உரிமையாளர் சங்கர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 11 ஆண்டு காலம் நடைபெற்ற இந்த வழக்கில் நில உரிமையாளர் சங்கர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்த மாவட்ட அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி கே .விஜயா குற்றம் சாட்டப்பட்ட நில உரிமையாளர் சங்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் , ரூபாய் 5,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார் .