உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றில் சிக்கிய ராட்சத மீன்கள்

உப்புக்கோட்டையில் முல்லைப்பெரியாற்றில் இளைஞர்கள் வீசிய வலையில் ராட்சத மீன்கள் சிக்கின.
முல்லைப்பெரியாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழைப்பொழிவு இல்லை. அதேபோல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் பாயும் முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து குறைந்துவிட்டது. குறிப்பாக உப்புக்கோட்டையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து மிகவும் குறைந்தது. இதையடுத்து ஆற்றில் ஆங்காங்கே குட்டைபோல் தேங்கியுள்ள தண்ணீரில் இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் மீன்பிடிக்க தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் நேற்று உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றில் ஏராளமானோர் போட்டிப்போட்டு மீன்பிடித்தனர். அப்போது சிலரது வலையில் ராட்சத மீன்கள் சிக்கின. மேலும் சிலருக்கு பெரிய அளவிலான மீன்கள் கிடைத்தன. இதில், ஆரா, கெளுத்தி, கெண்டை, கட்லா உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் சிக்கின. இதனால் இளைஞர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் பிடிபட்ட மீன்களை இளைஞர்கள் தெருவோரங்களில் கடைகள் அமைத்து விற்பனை செய்தனர். சிலர் தங்களது வீடுகளுக்கு எடுத்துச்சென்று மீன்களை சமைத்து சாப்பிட்டனர்.