மாமல்லபுரம் வந்த ஜெர்மனி குடும்பத்தினர்
பஸ்சை சொகுசு வீடாக மாற்றி சுற்றுலா செல்லும் ஜெர்மனி குடும்பத்தினர் துபாயில் பயணத்தை தொடங்கி மாமல்லபுரம் வந்தனர். தாய், தந்தை, மகன், மகள் என்று வந்த அவர்களில் மகன், மகள் இருவரும் தினந்தோறும் 6 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் படிக்கிறார்கள்.
ஜெர்மனி குடும்பத்தினர்
ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரை சேர்ந்தவர் காய் (வயது 45), இவரது மனைவி நீனா (44). இவர்களுக்கு பென் (12) என்ற மகனும், லெனி (10) என்ற மகளும் உள்ளனர். காய் ஜெர்மன் நாட்டில் உள்ள செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். தனது சுய சம்பாத்தியத்தில் வாழ வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டு துபாய் நாட்டில் குடியேறினார்.
தம்பதி இருவரும் அங்குள்ள சாப்ட்வேர் கம்பெனியில் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சீனியர் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக பணியாற்றி வருகின்றனர். தலா ரூ.50 லட்சம் சம்பளம் பெறும் இருவரும் மாதம் ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்டுகின்றனர்.
சொகுசு பஸ் பயணம்
துபாயில் உள்ள பள்ளியில் பென் 7-ம் வகுப்பும், லெனி 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ஜெர்மனியில் நிறைய சொத்து, போதிய வருமானம் இருந்தும், பெற்றோர்களை நம்பி இல்லாமல் சுயமாக சம்பாதித்து துபாயில் வாழ்ந்து வரும் காய், நீனா தம்பதி ஒரு சொகுசு பஸ்சை தயார் செய்து சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து துபாயில் ரூ.10 லட்சத்தில் ஒரு பஸ்சை வாங்கி அதில் ரூ.40 லட்சத்தில் சமையல் அறை, குளியல் அறை, படுக்கை அறை வசதி, ஏ.சி, டி.வி., பிரிட்ஜ் உள்ள ஒரு சொகுசு வீடாக மாற்றினர். இதையடுத்து அவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதி தங்கள் சொகுசு பஸ் பயணத்தை துபாயில் தொடங்கினர்.
மாமல்லபுரம் வந்தனர்
பிறகு ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று சுற்றி பார்த்த அவர்கள் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் வாகா எல்லை வழியாக இந்தியா வந்த அவர்கள் பஞ்சாப், உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சொகுசு வீடு பஸ்சில் நேற்று மாமல்லபுரம் வந்தனர்.
மாமல்லபுரம் சுற்றி பார்த்துவிட்டு ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றுவிட்டு, பிறகு நேபாளம், மியான்மர், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், உருகுவே, பிரேசில், அர்ஜென்டியனா, சிலி, பெரு, கொலம்பியா, ஈக்வடார் ஆகிய நாடுகள் வழியாக சென்று அமெரிக்காவில் தங்கள் சொகுசு வீடு பஸ் பயணத்தை நிறைவு செய்கின்றனர். கடற்கரை சூழ்ந்து உள்ள நாடுகளுக்கு சிறப்பு விசா பெற்று கப்பல் மூலம் இந்த பஸ்சை எடுத்து செல்லும் இந்த குடும்பத்தினர் பின்னர் அந்த நாடுகளில் சாலை மார்க்கமாக இந்த பஸ்சில் சுற்றி பார்க்க செல்கின்றனர். துபாய் பள்ளியில் தங்கள் மகன், மகளை தங்களுடன் சுற்றுலா அழைத்து செல்வதற்காக சிறப்பு அனுமதி பெற்று உடன் அழைத்து வந்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்பு
இவர்களது மகன் பென், மகள் லெனி இருவரும் தினமும் சொகுசு பஸ்சிலேயே லேப்-டாப் மூலம் 6 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு படிக்கின்றனர்.
குறிப்பாக இந்த நவீன சொகுசு பஸ்சை சாப்ட்வேர் என்ஜினீயர் காய் இதுவரை 22 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஓட்டி வந்துள்ளார். இவர்கள் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிடுவதில்லை. காயின் மனைவி நீனா சொகுசு பஸ்சில் உள்ள சமையல் கூடத்தில் இருந்து ஜெர்மனி உணவுகளை சமையல் செய்து தருகிறார். அதனை அவர்கள் சாப்பிடுகின்றனர். பஸ்சில் சோலார் வசதியும் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் மூலம் மின்சார வசதி பெற்று மின்விசிறி, மின் விளக்கு, குளிர் சாதன வசதி, பிரிட்ஜ் பயன்படுத்துகின்றனர்.