நீட் தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் வசதி தயாராக இருக்க வேண்டும்-கலெக்டர் அறிவுரை


நீட் தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் வசதி தயாராக இருக்க வேண்டும்-கலெக்டர் அறிவுரை
x

`நீட்’ தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் வசதி தயாராக இருக்க வேண்டும் என அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை,

`நீட்' தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் வசதி தயாராக இருக்க வேண்டும் என அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

நீட் தேர்வு மையம்

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை சிப்காட் டி.ஏ.வி. பெல் பள்ளி மற்றும் சோளிங்கர் கிருஷ்ணாவரத்தில் உள்ள வித்யாபீடம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகிய 2 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறைச் சார்ந்த அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:-

ராணிப்பேட்டையில் உள்ள மையத்தில் 528 மாணவ, மாணவிகளும், சோளிங்கரில் 264 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 792 பேர் நீட் தேர்வினை எழுத உள்ளனர். இந்த தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாைல 5 மணி வரை நடைபெற உள்ளது.

தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் காலை 11 மணி முதல் மதியம் 1.45 மணிக்குள் மட்டுமே தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.வினாத்தாள் கொண்டு வருவதற்கும், மேலும் தேர்வு மையத்தில் அதை வைப்பதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும். 2 மையங்களிலும் 2 தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பொது சுகாதாரத் துறையினர் 2 மையங்களிலும் மாணவ- மாணவிகளுக்கு தேவையான கிருமி நாசினி, முகக் கவசங்கள் மற்றும் மாணவ- மாணவிகள் உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவக் குழுக்களை வைத்திட வேண்டும். மேலும் 2 ஆம்புலன்ஸ்கள் அவசர உதவிக்காக தயார் நிலையில் வைக்க வேண்டும்.

ஜெனரேட்டர் வசதி

மின்தடை ஏற்படாமல் இருக்க இப்போதே அதற்கான நடவடிக்கைகளை மின்சார வாரியம் மேற்கொள்ள வேண்டும். தேர்வு நடைபெறும் மையங்களில் பள்ளி நிர்வாகம், ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் மாணவ -மாணவிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு மையத்திற்கு வெளியே போதிய இட வசதிகளை தயார் செய்து வழங்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் பெற்றோர்களுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டி தேவையை பூர்த்தி செய்ய கேண்டீன் வசதிகளை மையத்திற்கு வெளியே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தேர்வு மையங்களுக்கு மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் வருவதற்காக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்து...

மாணவ, மாணவிகள் நுழைவு சீட்டில் தெரிவித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் தவறாமல் கடைப்பிடித்து தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தேர்வு மையங்களில் மாணவ- மாணவிகள் செல்போன்களை வைப்பதற்கும், இதர பொருட்களை வைப்பதற்கும் பள்ளி நிர்வாகம் தனி இடத்தை ஒதுக்கி தர வேண்டும். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்புடன் மேற்கொள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story