பொது சிவில் சட்டம் அனைவருக்கும் நல்லது - மதுரை ஆதீனம் வரவேற்பு
பொது சிவில் சட்டம் தொடர்பான ஆலோசனைகளை மத்திய சட்ட கமிஷன் தொடங்கி உள்ளது.
காரைக்குடி,
போபாலில் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்'' என்று தெரிவித்திருந்தார். பிரதமரின் பேச்சு குறித்து பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிர் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
பொது சிவில் சட்டம் தொடர்பான ஆலோசனைகளை மத்திய சட்ட கமிஷன் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகிறது. இதுவரை சுமார் 9 லட்சம் கருத்துகள் பதிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் காரைக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. பொது சிவில் சட்டத்தை வரவேற்கிறேன். இந்த சட்டம் அனைவருக்கும் நல்லது. சாதாரண பொது மக்கள் முதல் ஆன்மிகவாதிகள் வரை அனைவருக்கும் பொதுவான இந்தச் சட்டத்தை வரவேற்கிறேன்" என்று கூறினார்.