முருகப்பெருமானுக்கு வேல் வழங்கிய கோவர்த்தனாம்பிகை
திருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து "சக்திவேல்" வாங்கினார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து "சக்திவேல்" வாங்கினார்.
வேல்வாங்குதல்
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதற் படைவீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று "வேல்வாங்கும்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க சர்வ அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமானும், சத்திய கிரீஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்தநிலையில் முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து "சக்திவேல்" பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முருகப்பெருமானின் பிரதிநிதியான சிவாச்சாரியார் தன் கையில் வேல் வாங்கி சகல பரிவாரங்களுடன் கோவர்த்தனாம்பிகை சன்னதியில் இருந்து புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள நந்தியை வலம் வந்து சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் சக்திவேல் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது திரளாக கூடி இருந்த பக்தர்கள், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
பூச்சப்பரத்தில் 6 முறை வலம்
இதைதொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பூச்சப்பரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி 6 முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழா நாளை(திங்கட்கிழமை) வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி கோவிலுக்குள் உள்ள மண்டபங்கள் மற்றும் சஷ்டி மண்டப வளாக பகுதியில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதமிருந்து வருகிறார்கள். இவர்களுக்காக பக்தி சினிமா, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடந்து வருகிறது.
(பாக்ஸ்)
2 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம்
கந்தசஷ்டி திருவிழாவின் சிறப்பு அம்சமாக "சூரசம்ஹாரம்" நடைபெறும். சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து பெற்ற சக்திவேல் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியானது தொன்றுதொட்டு நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கொரோனா தொற்றால் ஊரடங்கின் காரணமாக பக்தர்கள் அனுமதி இன்றி கோவிலுக்குள்சூரசம்ஹாரம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் சூரசம்ஹாரம் நடக்கிறது.