கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது:ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.
கவுமாரியம்மன் கோவில் திருவிழா
தேனி மாவட்டம் வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 8 நாள் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி கடந்த மாதம் 17-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி கவுமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதற்கிடையே காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் நீராடினர். பின்னர் அவர்கள் ஆற்றங்கரையில் அக்னி சட்டிக்கு யாகம் வளர்த்து மேள, தாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் முன்பு உள்ள பெரிய தொட்டியில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
இதேபோல் கரகம், காவடி, ஆயிரம் கண்பானை, மண்கலயத்தில் தீர்த்தம் மற்றும் உடலில் சேறு பூசி, சேத்தாண்டி வேடமிட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் தங்களது குழந்தைகளுடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். திருவிழாவை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை 1 மணியில் இருந்தே பக்தர்கள் வரத்தொடங்கினர். இதனால் உப்புக்கோட்டை விலக்கில் இருந்து உப்பார்பட்டி விலக்கு வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் கடல் அலைபோல் திரண்டிருந்தனர்.
பக்தர்கள் வசதிக்காக உப்புக்கோட்டை விலக்கு மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, போடி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், வருசநாடு ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 7 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டி, குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கோபுரங்கள்
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, கடத்தல் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முல்லைப்பெரியாற்றின் கரை கோவில் வளாகம் உட்பட 5 இடங்களில் தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு வீடியோ கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தேனி தீயணைப்பு கோட்ட அலுவலர் கல்யாணகுமார் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்கள், வாட்டர் மிஸ்ட் எனப்படும் குறுகிய சந்துகளில் செல்லும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.