பழனி பஸ் நிலையத்தில் தீப்பற்றிய கியாஸ் சிலிண்டர்; பயணிகள் அலறியடித்து ஓட்டம்


பழனி பஸ் நிலையத்தில் தீப்பற்றிய கியாஸ் சிலிண்டர்; பயணிகள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2023 3:00 AM IST (Updated: 21 Oct 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

பழனி பஸ் நிலையத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திண்டுக்கல்

பழனி பஸ் நிலையத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சிலிண்டரில் பயங்கர தீ

பழனி பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கிழக்கு பகுதியில் டவுன் பஸ்களும், மேற்கு பகுதியில் புறநகர் பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. பஸ்நிலைய நடைமேடை பகுதிகளில் இனிப்பு கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளன.

இந்நிலையில் பழனியை சேர்ந்த வீரமணி என்பவர் டவுன் பஸ் நடைமேடை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று மாலை 6.30 மணி அளவில் இட்லி தயார் செய்வதற்காக ஓட்டல் ஊழியர் சிலிண்டருடன் கூடிய அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென கியாஸ் சிலிண்டர் கேபிளில் தீப்பற்றியது. பின்னர் தீ பயங்கரமாக பற்றி எரிந்ததால் அவர் சிலிண்டரை வெளியே தள்ளினார். இதைத்தொடர்ந்து அவர் தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

தீ அணைப்பு

இதைக்கண்டதும் அங்கு நின்ற பயணிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அங்கு நின்ற பஸ்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பழனி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். நல்ல வேளையாக சிலிண்டர் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story