குப்பைகள் அகற்றும் பணி
குடியாத்தத்தில் குப்பைகள் அகற்றும் பணியை நகரமன்ற தலைவர் சவுந்தரராஜன் ஆய்வு செய்தார்.
குடியாத்தம்
குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படுவதே இல்லை என கூறப்படுகிறது.
மேலும் தினந்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதேபோல் நகரமன்ற தலைவரிடம் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் குப்பைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்த இன்று காலை நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், சி.என்.பாபு, சுமதிமகாலிங்கம், ரேணுகாபாபு, இந்துமதி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் திடீரென குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது பல இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் தேங்கியிருப்பது தெரியவந்தது இதனையடுத்து துப்புரவு பிரிவு அதிகாரிகளை அப்பகுதிக்கு அழைத்து உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் என அங்கேயே நின்றார்.
உடனடியாக தூய்மை பணியாளர்கள் வந்து தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்றினார்கள்.
அப்போது அவர்களிடம் நகரமன்ற தலைவர், குப்பைகளை தினந்தோறும் அகற்றவேண்டும். பல இடங்களில் பல நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதே நிலை நீடித்தால் துப்புரவு பிரிவில் உள்ள மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.