கைதிகளிடம் கஞ்சா, செல்போன் பறிமுதல்
திருச்சி மத்திய சிறையில் நடத்திய அதிரடி சோதனையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மத்திய சிறையில் நடத்திய அதிரடி சோதனையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறையில் செல்போன், கஞ்சா
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதிகள், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கு பல்வேறு அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சிறைக்குள் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் செல்போன்களை கைதிகள் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் தலைமையில் சிறை வார்டன்கள், சிறை காவலர்கள் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அறை எண் 31-ல் அடைக்கப்பட்டு இருந்த திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைராஜா (வயது 25) என்ற கைதி செல்போனை மறைத்து வைத்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
4 பேர் மீது வழக்கு
இதேபோல், உயர் பாதுகாப்பு அலகு 1 மற்றும் 2-ல் மதுரை சவுராஷ்டிரா காலனி திருநகரை சேர்ந்த கைதி விக்னேஷ் (22), சிவகங்கை திருபுவனம் வேம்பூரை சேர்ந்த முகிலன் (24), மேற்கு வங்காளத்தை சேர்ந்த லடேன்தாஸ் (25) ஆகியோர் கஞ்சாவை பதுக்கி வைத்து பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரு சிம்கார்டு, ஒரு செல்போன் மற்றும் அதற்குரிய பேட்டரி, 50 கிராம் கஞ்சா ஆகியவற்றை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து திருச்சி கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் சிறை அதிகாரி சண்முகசுந்தரம் புகார் செய்தார். அதன்பேரில், 4 கைதிகள் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணை
சிறைக்குள் கைதிகளை அழைத்துச்செல்லும் போது, தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிப்பார்கள். அப்படி இருக்கும் போது, கைதிகளுக்கு செல்போன் மற்றும் கஞ்சாவை மறைத்து வைத்து கொடுத்தது யாா்? சிறைக்காவலர்களா? அல்லது கைதிகளை பார்க்க வந்தவர்களா? என்று சிறைத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.