6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்
நெல்லை மாவட்டத்தில் 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை மிரட்டல்
நெல்ைல மாவட்டம் இட்டமொழி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கதிரேசன் (வயது 23). இவர் பெண்ணை அவதூறாக பேசி தவறாக நடந்து கொண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் இன்ஸ்பெக்டர் ஜமால் நேற்று வழங்கினார்.
வாலிபர்
நெல்லை அருகே உள்ள குப்பக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ் (21) என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று சுரேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் ராதா நேற்று வழங்கினார்.
அடிதடி
நெல்லை அருகே உள்ள வெங்கடாசலபுரம் நடுத்தெருவை சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் உலகுராஜ் (23), குமார் (20) ஆகியோர் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலசேவல், வடக்கு ரதவீதியை சேர்ந்த செல்லப்பா மகன் முத்துராஜ் என்ற முத்து (42) என்பவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பெருமாள், தில்லைநடராஜன் ஆகியோர் பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கினார்கள்.
கொலை முயற்சி
நெல்லை அருகே உள்ள கொத்தங்குளம் இந்திரா காலனியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் தினேஷ் (19). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார்.
கலெக்டர் விஷ்ணு இந்த பரிந்துரையை ஏற்று தினேஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி இந்த உத்தரவு நகலை முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் நேற்று திருச்சி மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.