4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை அருகே உடையார்பட்டி யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நெல்லையப்பன் என்பவருடைய மகன் இசக்கி சுப்பையா தாஸ் (வயது 24). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவரை கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ரவுடி பட்டியலில் சேர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர்.
கொலை முயற்சி
இந்த நிலையில் இவரும், சங்கர்நகர் சாரதாம்பாள் நகரை சேர்ந்த ராஜகோபாலன் என்ற சின்னராஜா (21) என்பவரும் சேர்ந்து சிந்துபூந்துறை ஆற்றங்கரை பகுதியில் வைத்து பாஸ்கர் என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் படுகாயம் அடைந்த பாஸ்கர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிசுப்பையா தாஸ், ராஜகோபாலன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனருக்கு போலீசார் பரிந்துரைத்தனர். இதையடுத்து கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவுப்படி இசக்கிசுப்பையா தாஸ், ராஜகோபாலன் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நகலை, பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.
இதேபோல் தாழையூத்து ராஜவல்லிபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆர்த்தீஸ்வரன் (21). இவரை தாழையூத்து போலீசார் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ஆர்த்தீஸ்வரன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக வலைதளத்தில் வீடியோ
பாளையங்கோட்டை அருகே உள்ள பாலாமடை அம்மன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சுரேஷ் (20). இவர் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில், சமூக வலைதளத்தில் வீடியோ பதிவை "ஸ்டேட்டஸ்" ஆக வைத்துள்ளார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
இவர் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் கார்த்திகேயன், சுரேசை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தார்.